கமுகு – Betelnut Tree
பட்டினப்பாலை, ஆசிரியர் – கடியலூர் உருத்திரங் கண்ணனார் (Urai by Dr. R. Rukmani)
மருத நிலத்தின் வளமை
விளைவு அறா வியன் கழனி
கார்க்கரும்பின் கமழ் ஆலைத்
தீத் தெறுவின் கவின்
வாடிநீர்ச் செறுவின் நீள் நெய்தற்
பூச்சாம்பும் புலத்து ஆங்கண்,
காய்ச் செந்நெல் கதிர் அருந்து
மோட்டு எருமை முழுக்குழவி
கூட்டு நிழல் துயில் வதியும்
கோள் தெங்கின் , குலை வாழை,
காய்க் கமுகின் , கமழ் மஞ்சள்
இனமாவின் இணர்ப் பெண்ணை
முதற் சேம்பின் முளை இஞ்சி (8-19)
கருத்துரை – சோழ நாட்டு அகன்ற வயல்களில் விளைச்சல் நீங்காது நடந்து கொணடேயிருக்கும். அவ்வயல்களில் விளைந்த நன்கு முற்றிய கரும்பினைப் பாகாகக் காய்ச்சும் மணம் கமழும் ஆலைகளும் உண்டு. அவ்வாலைகளில் இருந்து வரும் நெருப்புப் புகையின் வெப்பத்தால் நீர் நிறைந்த வயல்களில் நீண்டு வளர்ந்திருக்கும் நெய்தல் பூக்கள், அழகு கெட்டு வாடிப் போகும். அவ்விடங்களிலே விளைந்த காய்ந்த செந்நெல்லின் கதிர்களைத் தின்ற பெரிய வயிற்றையுடைய எருமை மாட்டின் முதிர்ந்த கன்றுகள், நெற்கூடுகளின் நிழலிலே படுத்து உறங்கும். மருத நிலத்தில் குலைகளையுடைய தென்னை, தாறு போட்டிருக்கும் வாழை, காய்த்திருக்கும் பாக்கு , மணக்கும் மஞ்சள், பல்வேறு இன மா மரங்கள் , குலை குலையாகத் தொங்கும் காய்களையுடைய பனை மரங்கள், கிழங்கினையுடைய சேப்பஞ்செடிகள் மற்றும் முளைத்திருக்கும் இஞ்சி செடிகளும் காணப்படும்.
சொற்பொருள் விளக்கம் - விளைவு – விளைதல், அறா- நீங்காத, வியன்- அகன்ற , கழனி- வயல், கார்க்கரும்பு-கருத்த முற்றிய கரும்பு. கமழ்- மணம், ஆலை- கரும்புச் சாற்றினைப் பாகாகக் காய்ச்சுகின்ற ஆலை. தீத்தெறுவின்- தீச்சுடுதலால், கவின் – அழகு, வாடி- உலர்ந்து, பொலிவிழந்து, நீர்ச்செறுவின் –நீருடைய வயல், நீள் – நீண்ட , ஆங்கண் – அவ்விடத்து, காகண் செந்நெல் கதிர் காய் – காய்த்த செந்நெல்லின் கதிர், அருந்து-மேய்ந்து , தின்று , மோட்டு எருமை- பெருத்த வயிற்றையுடைய எருமை மாடு, முழுக்குழவி – எருமையின் முதிர்ந்த கன்று, கூட்டு நிழல்- நெற்கூட்டின் நிழலில் , துயில்-தூக்கம், வதியும் – விலங்கு முதலிய தங்குமிடத்தில் தங்குதல், கோள் தெங்கின் – குஐலகளையுடைய தென்னை மரங்கள், குலை வாழை – தாறுகளைக் கொண்ட வாழை மரங்களும், காய்க்கமுகின் – காய்களையுடைய பாக்கு மரங்கள் , கமழ் மஞ்சள் – மணம் கமழும் மஞ்சள், இன மாவின் – பல்வேறு இன மரங்கள், முதற்சேம்பின்- முதற்கிழங்கு வந்த சேப்பஞ் செடிகள், முளை இஞ்சி- முளைத்திருக்கும் இஞ்சி செடிகள்.